Published Date: June 2, 2023
CATEGORY: CONSTITUENCY
மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு முடித்த 879 மாணவ மாணவிகளுக்கு நேற்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பட்டம் வழங்கினார்.
பட்டமளிப்பு விழா:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு)புவனேசுவரன் கல்லூரியின் வளர்ச்சி குறித்த ஓராண்டுக்கான அறிக்கை வாசித்தார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் தலைமை தாங்கினார். இதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். முன்னதாக அவர் பேசியதாவது:-
மாணவ, மாணவிகளுக்கு இளமைக்கால கல்லூரி கனவு என்பதில் பட்டம் பெறுவதும் ஒன்றாகும். கல்லூரி நாட்களை மாணவ மாணவிகள் என்றைக்கும் மறக்க முடியாது. உயர்கல்வியின் நோக்கம் என்பது வேலைவாய்ப்பு என்பதற்கு மேலானது. சிறந்த குடிமக்களை உருவாக்குவது தான் உயர்கல்வியின் நோக்கமாகும்.
879 மாணவ, மாணவிகள்:
தமிழகத்தில் கல்வி என்பது ஜனநாயகமானதாக உள்ளது. இதனால் இன்றைக்கு நூற்றுக்கணக்கான என்ஜினீயரிங் கல்லூரிகளும், ஆண்டுக்கு லட்சக்கணக்கான மாணவர்களும் என்ஜினீயர்களாக பட்டம் பெறுகின்றனர். தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டி ஆலோசனை முகாம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் திறமையான தகுதி வாய்ந்த நபர்கள் பல்வேறு துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர்.
பட்டம் பெரும் நீங்கள் நாட்டிற்கும், வீட்டிற்கும், மனித சமுதாயத்திற்கும் கற்ற கல்வியை கொண்டு உதவி செய்ய வேண்டும். இதற்காக உங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை, பள்ளி, கல்லூரிகளை மறந்து விடக்கூடாது. வெற்றி என்பது உலகில் உள்ள அனைவருக்கும் எளிதில் கிடைத்து விடாது. தோல்வி என்பது தற்காலிகமானது தான். வெற்றிக்கு 2 வழிகள் உள்ளன. துணிச்சல், மன உறுதியுடன் கூடிய விடா முயற்சி, மற்றொன்று இலக்கை நோக்கி பயணித்தல் ஆகும். இதன் மூலம் நீங்கள் சமுதாயத்துக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் இளநிலை பட்டப்படிப்பு முடித்த 752 மாணவ, மாணவிகளுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 127 மாணவ, மாணவிகளுக்கும் என 879 பேர் பட்டம் பெற்றனர்.
Media: DAILYTHANTHI